நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.
அதன்படி, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். என். ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில், மூத்த அமைச்சர் கே. என். நேரு தலைமையிலான தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உடன் அமைச்சர்களான எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழுவிற்கான தலைவராக, திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த குழுவில், அமைச்சர்களான் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர். கே. பன்னீர் செல்வம், திருச்சி சிவா எம்.பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், திமுக துணைப் பொதுச்செயலாளர்களான பொன்முடி மற்றும் ஆ. ராசா ஆகியோரும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“