உப்பளத் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கேள்விகளுக்கு, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பதில் அளித்துள்ளார்.
கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விகள்:
இந்தியாவில் உள்ள உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் எத்தனை உப்பளத் தொழிலாளர்கள் உள்ளனர்? கடந்த 5 ஆண்டுகளில், 'உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வெகுமதிகள் வழங்கும்' திட்டத்தின் கீழ், மாநிலம் மற்றும் ஆண்டு வாரியாக எத்தனை பேர் பயனடைந்து உள்ளனர்? கல்விச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்திருப்பதால், இந்தத் திட்டத்தின் நிதியுதவியை அதிகரிக்க அரசு ஆய்வு செய்துள்ளதா?நிதியுதவியை அதிகரிக்க அல்லது திட்டத்தை விரிவுபடுத்த அரசுக்கு ஏதேனும் ஆலோசனை உள்ளதா? இல்லையென்றால் அதற்கான காரணம் என்ன? என்று கனிமொழி கருணாநிதி எம்பி. கேள்விகள் கேட்டிருந்தார்.
மத்திய அமைச்சரின் பதில்கள்:
இக்கேள்விகளுக்கு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பதில் அளித்துள்ளார். இந்தியாவில் ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 8 மாநிலங்கள் உப்பு உற்பத்தி மாநிலங்களாக இருக்கின்றன. குஜராத்தில் 20 ஆயிரத்து 500 உப்பளத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 500, ராஜஸ்தானில் 15,000, ஆந்திராவில் 5,500 உப்பளத் தொழிலாளர்களும் மற்ற மாநிலங்களில் 2 ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். Grant of Rewards to the Children of Salt Labourers என்ற உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வெகுமதிகள் வழங்கும்' திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலமாக உப்பு உற்பத்தி செய்கிற 8 மாநிலங்களிலும் 2021-22 நிதியாண்டில் 2,009 பேர், 2022-23ல் 1,657 பேர், 2023-24ல் 1,896 பேர், 2024-25ல் 1,573 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக 15, 500 உப்பளத் தொழிலாளர்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 2021-22ல் 290 பேரும், 2022-23ல் 373 பேரும், 2023-24ல் 623 பேரும், 2024-25ல் 438 பேரும் என உப்பளத் தொழிலாளர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியின் அளவு பற்றிய மதிப்பாய்வு ஏதும் அரசால் செய்யப்படவில்லை. அதனால், தொழிலாளர்களுக்கு உதவும் திட்டம் விரிவுபடுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்