வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி இணைந்துள்ளதாக டிடிவி தினகரன், மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.
விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை இறுதி செய்வதற்காக கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களமிறங்குகிறது.
பாஜக கூட்டணியில் தமாகா, சமத்துவ மக்கள்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை (மார்ச் 12) நள்ளிரவு, ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டது.
சென்னை - கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், நள்ளிரவு 11.15 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 2 மணி வரை தொடர்ந்தது.
இந்த சந்திப்பின்போது பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது 10 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி, ஓபிஎஸ் தரப்பில் பாஜகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பாஜக தலைவர்கள் சம்மதிக்கவில்லை, கூட்டணியில் இன்னும் சில பேர் இணைவார்கள். அதனால் 7 தொகுதிகளை ஒதுக்குகிறோம், என்று தெரிவித்துள்ளனர். அதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி கலந்தாலோசனை நடத்தினோம். தொகுதிகள் பற்றியெல்லாம் ஒரு உறுதியான முடிவுக்கு வந்த பிறகு அறிவிப்போம். சின்னம் தொடர்பாக எனக்கு எந்த நிர்பந்தமும், அச்சுறுத்தலும் இல்லை.
ஆர்கே நகரில் நான் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடும். அதுதான் எங்களின் விருப்பமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த தொகுதிகளின் பட்டியலை அண்ணாமலையிடம் வழங்கி உள்ளோம்.
மீண்டும் 3வது முறையாக மோடி பிரதமராக வருவதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை பெற்று தர முடியும் என்ற அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தர வேண்டும் என்பது தான் இந்த தேர்தலில் எங்களின் ஒரே இலக்கு. அதற்காக நாங்கள் இணைந்துள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்’, என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ’இரண்டாம் கட்டமாக கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது
சின்னம் குறித்த சாதக பாதகங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம்,’ என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.