தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக அதிமுக-தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பேசுகையில், ’கடலூர் நாடாளுமன்ற தொகதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக நன்கு அறிமுகம் ஆன சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அனைவராலும் மதிக்கப்படுபவர். எளிமையான நபர். இந்த பகுதியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
தேமுதிகவில் விஜயகாந்த் ரசிகராக இருந்து பண்ருட்டி எம்எல்ஏவானவர். அதற்கு முன்பு எம்ஜிஆர் ரசிகராகவும், ஜெயலலிதா ரசிகராகவும் இருந்தவர்.
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றியவர். அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உச்சப்பட்ட பதவியில் உட்கார முடியும். அந்த வகையில் நம்மை போன்ற சாதாரண தொண்டரை இன்றைக்கு தேமுதிக பொதுச்செயலாளர், வேட்பாளராக அறிவித்துள்ளார்.
அவருடைய சின்னம் பம்பரம் சின்னம்’, என்றார்.
அப்போது நிர்வாகி ஒருவர் சின்னத்தை தவறாக கூறியதாக சிவி சண்முகம் காதில் கூறினார்.
இதையடுத்து சுதாரித்து கொண்ட சிவி சண்முகம், ’மன்னித்துவிடங்கள். சின்னத்தை தவறாக சொல்லிவிட்டேன். டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். நீதிமன்றத்தில் இன்று ஒரு கட்சிக்கு (மறைமுகமாக மதிமுகவை குறிப்பிட்டு) அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஞாபகத்தில் கூறிவிட்டேன். நம்முடைய வேட்பாளர் முரசு சின்னத்தில் நிற்கிறார்’ ,என்று கூறி சமாளித்தார்.
அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“