கடலூர், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 26வது தொகுதி ஆகும்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த தொகுதி, நெய்வேலி என்எல்சி நிறுவனம், கடலூர் துறைமுகம் என பல அடையாளங்களை கொண்டது. மீன்பிடித் தொழில், கடலூர் சிப்காட், விருத்தாசலம் பீங்கான் தொழிற்சாலை, தனியார் சர்க்கரை ஆலைகள், முந்திரி ஏற்றுமதி, பலா விற்பனை இந்த பகுதியில் முக்கியத் தொழில்கள்.
பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், விருத்தகிரீஸ்வரர் கோவில், சத்தியஞான சபை, வீரட்டானேஸ்வர் கோவில், சரநாராயணபொருமாள் கோவில், வைத்தியநாதசுவாமி கோவில் ஆகிய ஆன்மிகத் தலங்கள் உள்ளன.
தேர்தல் வரலாறு
கடலூர் தொகுதியை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியே அதிக முறை வென்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 17 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிமுக 2 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை இத்தொகுதியில், மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல் (Image Credit: Wikipedia)
கடந்த மக்களவை தேர்தல்
2019 மக்களவை தேர்தலில், கடலூர் தொகுதியில் 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி. ரமேஷ், பாமக வேட்பாளரான, கோவிந்தசாமியை 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்நிலையில், டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டையைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கில் எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இத்தொகுதியில் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களை, தங்கள் கட்சிக்கான வாக்குகளாக மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது.
இதனால் இந்த மக்களவை தேர்தலில் திமுக அல்லது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுமா என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“