தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு ராமநாதபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம், விசிகவுக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகள் சமீபத்தில் ஒதுக் கப்பட்டன.
திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.
இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ’பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் என் சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.
தேர்தல் நேரத்தில் ஐ.டி.சோதனை உள்ளிட்ட பலவற்றையும் செய்வார்கள். திமுகவில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சமாட்டோம்’, என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“