தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 2004, 2009, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்தான் இந்தமுறையும் களத்தில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 1) தயாநிதி மாறன், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரது மகள் பிரியா தயாநிதி மாறனும், தந்தைக்கு ஆதரவாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய தயாநிதி மாறன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். தேர்தல் வந்துள்ளதால் ஓட்டுக்காக ஓடி வருவதாக தெரிவித்த அவர், மோடி போன்று தங்களால் நடிக்க முடியவில்லையே என்று அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன், ரஜினிகாந்த் வருத்தத்தில் இருப்பதாக விமர்சித்தார்.
மத்திய சென்னை உருவானதில் இருந்து இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“