நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தாமல் வேறு மைக் சின்னத்தை பொருத்தியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி, தனித்துப் போட்டியிடுகிறது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இதனிடையே நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தாமல் வேறு மைக் சின்னத்தை பொருத்தியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தார்.
/indian-express-tamil/media/media_files/HFgvAqin99NP0H06jhgq.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ள மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு மைக் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தபட்டு வருகிறது.
அதனை தடுத்து நிறுத்தி எங்களுக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் வாக்கு வங்கியை பாதிக்கவே பா.ஜ.க. இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது எங்கள் வாக்கு வங்கியை பாதிக்கும், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“