நீலகிரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 19வது தொகுதி ஆகும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், குன்னூர் (தனி), கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி), கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி.
மூன்று தனி சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள நீலகிரி மக்களவைத் தொகுதி, 2009 முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தனித் தொகுதியாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம். விவசாயிகளில் 50% பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறு, குறு விவசாயிகளும் இங்கு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேயிலைத் தொழிற்சாலைகளை தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் படுகர்கள், பழங்குடியினர், பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள், ஒக்கிலிகர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் உள்ளனர். இதில் மலை மாவட்டத்தில் படுகர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளனர். சமவெளிப் பகுதி மாவட்டங்களில் பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.
தேர்தல் வரலாறு
1990கள் வரை காங்கிரஸ் பலம் வாய்ந்த தொகுதியாக நீலகிரி இருந்தது, இங்கு ஏழு முறை அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.
1967-ல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வென்றிருக்கின்றன. இரு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது.
2019 மக்களவை தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.ராசா, தனி தொகுதியாக இருந்தவரை சொந்த தொகுதியிலேயே போட்டியிட்டு வந்தார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு பெரம்பலூர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.
எனவே, பொது தொகுதியாக இருந்து தனித் தொகுதியாக மாறிய நீலகிரியில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 தேர்தலில் 2-வது முறையாக நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா தோல்வி அடைந்தார். அறிமுகமே அல்லாத அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2ஜி வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தது அதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் திமுகவின் ஆர். ராசா மீண்டும் நீலகிரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கினார். இதில், அதிமுகவின் தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றார்.
நீலகிரி தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை (2024)
மொத்த வாக்காளர்கள்- 5,73,624
ஆண்- 2,74,497
பெண்- 2,99,107
மூன்றாம் பாலினத்தவர்- 20
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“