பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், பெருவாரியான வாக்குகள் பெற்றிருக்கும் நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் பெயர்கொண்ட மேலும் 5 பேர் பெற்ற வாக்கு விபரங்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் சில முறை முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் பின்னடைவை சந்தித்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது குறித்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் அவருக்கு எதிராகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
இதன் காரணமான ஒ.பி.எஸ். தலைமையில் தனியாக ஒரு அணி உருவான நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணி பா.ஜ.கவுக்கு எதிராகவும், ஒ.பி.எஸ்.அணி பாஜக கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தது. இதனையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. கூட்டணியில் ஒ.பி.எஸ். ராமநாதபுரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டார். அ.தி.மு.க தேமுதிக கூட்டணியுடன் களமிறங்கியது.
இதனிடையே ராமநாதபுரம் தொகுதியில் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 4 பேர் ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மற்ற 5 பேருக்கும், வாலி, திராட்சை, பட்டாணி, கரும்பு விவசாயி, க்ளாஸ் டம்பளர் ஆகிய சின்னங்கள் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் இந்திய கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், அவரை எதிர்த்து சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது ராமநாதபுரம் தொகுதியில், நவாஸ் கனி, 67919 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் ஒச்சப்பன் பன்னீர்செல்வம் 680 வாக்குகளும், மயிலாண்டி பன்னீர்செல்வம் 521 வாக்குகளும், ஒய்யாரம் பன்னீர்செல்வம் 269 வாக்குகளும், ஒச்சத்தேவர் பன்னீர்செல்வம் 127 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில், நோட்டாவுக்கு 1514 வாக்குகள் விழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“