திங்கள் கிழமை பங்குனி உத்திரம் நாள் என்பதால், சென்னை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வட சென்னையில் 13 பேர், தென் சென்னையில் 17 பேர், மத்திய சென்னையில் 7 பேர் என மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது.
நேற்று பங்குனி உத்திரம் என்பதால் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் நேற்று ஆர்வத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வட சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா வேட்பு மனுக்களைப் பெற்றார்.
இங்கு திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் மனோகரன், பாஜக சார்பில் பால் கனகராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெ. அமுதினி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இக்பால் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளராக, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று (25.03.2024), அடையாறு - பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில், திமுக வேட்பாளராக… pic.twitter.com/9DwIZtu0Q9
— தமிழச்சி (@ThamizhachiTh) March 25, 2024
மிக்க நன்றி....நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்.... தேசத்தையும், பாரத பிரதமரின் கரங்களையும் வலுப்படுத்துவோம்... https://t.co/iX3xIUqcTb
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) March 25, 2024
தென் சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் சென்னை அடையாரில் உள்ள தென் சென்னை மாநகராட்சி வட்டாரதுணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஜெ.ஜெயவர்தன், திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதுதவிர அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேர் தென்சென்னை தொகுதியில் திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மத்திய சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் அண்ணா நகரில் உள்ள மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு பாஜக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ப.பார்த்தசாரதி, வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சமரன், சுயேச்சை வேட்பாளர்கள் இஸ்மாயில் கனி, ராமன், முகமது நிலாவர் அலி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் நாளை (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
கடந்த வாரம் முதல் சென்னை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் 21 பேர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 16 பேர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் 15 சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.