நீலகிரித் தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசா, தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோரின் மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா மனு பின்னர் ஏற்கப்பட்டது.
18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 1,403 வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,749 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
இதையடுத்து, தகுதியுள்ள வேட்பாளர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யும், தி.மு.க வேட்பாளருமான ஆ.ராசாவின் வேட்புமனு இன்று திடீரென நிறுத்தப்பட்டது. மேலும், அ.தி.மு.க வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. காலை முதலே தொடர்ச்சியாக வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றும் வரும் சூழலில், இருவரது வேட்புமனுக்களும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டன அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் சில மணி நேரத்திலேயே இரு மனுக்களும் ஏற்கப்பட்டன.
ஆ.ராசா, லோகேஷ் இருவரது வேட்புமனுவிலுமே இந்து என குறிப்பிட்ட சாதி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அருணா முன்னிலையில் இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், ‘இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தி சாதி பெயர் போடக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மற்ற வேட்பாளர்களும் ஆட்சேபனை தெரிவித்ததால் இரண்டு மனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னையில் உள்ள உயர் தேர்தல் அதிகாரிகளிடம் பரிசீலித்த பிறகு முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பரிசீலனையின் இரண்டு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
முன்னதாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 33 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன், நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் போன்றோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன.
அடுத்ததாக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் பிரமாணப் பத்திரத்தை தாமதமாக பதிவேற்றம் செய்ததை சுட்டிக்காட்டி, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், டி.டி.வி தினகரனின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இரட்டை வாக்காளர் பிரச்சனை எழுப்பப்பட்டதால், விளக்கம் கொடுக்கும் வரை செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியின் வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் அளித்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது செல்வகணபதியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.