மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க - புதிய தமிழகம் கட்சிகளிடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக தரப்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதிப் பங்கீடு நடந்துவரும் நிலையில் அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், ஜெயக்குமார் ஆகியோர் கிருஷ்ணாசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெரிவித்தோம். அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படும், என்றார்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சில கருத்துக்களை கிருஷ்ணசாமி முன்வைத்துள்ளார். அதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்போம். கிருஷ்ணசாமி கூறியது போல், இபிஎஸ் தலைமையில் இக்கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். மக்களவை தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும், என்று தெரிவித்தார்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“