தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தானே புயலின் போது இப்பகுதி மக்களுக்கு ஓடிவந்து உதவியது தங்கர் பச்சான் தான். கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், கடலூருக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று நினைத்த போது, தகுதியான வேட்பாளர் தங்கர் பச்சான் என்று முடிவு செய்து, அவரை நிறுத்தியுள்ளோம்.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் எனது மைத்துனர். (இவருடைய தங்கை சவுமியாவைத்தான் அன்புமணி ராமதாஸ் திருமணம் செய்துள்ளார்)
ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு பிரசாத், இந்த கல்யாணத்துல மாப்பிள்ளை நான்தான். ஆனால் நான் போட்டிருக்கும் சட்டை அமைச்சரர் உடையது என்று சொல்கிறார்.
அமைச்சர் அவர் பிள்ளையை முதலில் மாப்பிள்ளையாக ஆக்க பார்த்தார். முடியவில்லை, ஆனால் உண்மையான மாப்பிள்ளை யாரு? நம்ம தங்கர் பச்சான்தான் இந்த தொகுதியின் உண்மையான மாப்பிள்ளை. விஷ்ணு பிரசாத் கல்யாண மண்டபம் மாறி வந்து விட்டார்.
ஆரணி கல்யாண மண்டபம் போயிருக்கணும். தப்பித் தவறி கடலூர் கல்யாண மண்டபம் வந்துட்டார். இங்கே அவருக்கு வேலை இல்லை.
யாராக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் நாகரீகமாக பேச வேண்டும்.
எனக்கு கட்சி தான் முக்கியம்; பிறகு தான் குடும்பம். மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள், திமுக, அதிமுகவை ஒதுக்குங்கள். கடலூரில் இருந்து மாற்றத்தை தொடங்குங்கள், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.