சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 1,433 பேர் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7வது கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டோரை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி ரிப்பன் கட்டிட வளாகத்தில் திங்கள்கிழமை (மே 27) மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் தேர்தல் அலுவலர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு முதல் கட்ட கணினி குலுக்கல் முறை தேர்வு திங்கள்கிழமை (மே 27) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 1,433 பேர் ஈடுபடவுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு மே 29 ஆம் தேதி முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதைத் தொடர்ந்து ஜூன் 3 ஆம் தேதி காலை நடைபெறும் 2வது கட்ட பயிற்சியின் போது, யார் யார் எந்த மக்களவை தொகுதிக்குச் செல்கிறார்கள் என்றும், ஜூன் 4 ஆம் தேதி காலை 5 மணிக்கு எந்த மேஜைக்கு செல்வார்கள் என்றும் தேர்வு செய்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கடந்த வாரம் பூத் ஏஜென்டுகள் உடன் அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், பூத் ஏஜென்டுகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ஜூன் 1 ஆம் தேதிக்குள் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்கள் யார் எந்த பூத்துகளுக்கு வர உள்ளார்கள் என்று அந்தந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தால், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்,” என்றார் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“