தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதி இடம்பெற்றிருப்பது மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து வந்த மயிலாடுதுறை, 1991-ல் புதிதாக உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.
மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதி இது.
காவிரி பாசன விவசாயப் பகுதியான இந்தத் தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விவசாயமே இந்தப் பகுதியின் உயிர் மூச்சு. அரிசி, தேங்காய் பிரதான விளைபொருட்கள். காவிரியில் நீர்வரத்து இல்லாத காலங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பட்டு, கைத்தறி நெசவு, பித்தளைப் பாத்திரங்கள் உற்பத்தி, வெண்கலச் சிலைகள் தயாரிப்பு போன்ற தொழில்களும் உள்ளன. மீன் பிடித்தொழிலும் உண்டு. இங்கு வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கின்றனர். நாட்டில், முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் மயிலாடுதுறையும் ஒன்று.
அரசியலைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்த தொகுதி. வழக்கமாகவே காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியாகவே இருந்துள்ளது. எனினும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.,வின் ஆதரவுடனேயே காங்கிரஸ் அதிக முறை வென்றுள்ளது. பா.ம.க.,வுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ள தொகுதி இது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைப்பெற்று வருகிறது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ம் ஆண்டுதான் தி.மு.க இந்தத் தொகுதியில் நேரடியாகக் களம் கண்டது. மயிலாடுதுறை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,38,351 ஆகும். ஆண் வாக்காளர்கள் 7,56,846-ம், பெண் வாக்காளர்கள் 7,81,436-ம், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 69 பேரும் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். இந்தத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.
மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரெயில் பாதை பணி, விவசாயம், நெசவுத்தொழில் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், மயிலாடுதுறை தொகுதியை தொழிற்பேட்டையாக ஆக்குவேன் என்று வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். இதில் மயிலாடுதுறை-விழுப்புரம் அகல ரெயில் பாதை பணி முடிவடைந்து விட்டது. ஆனால் மயிலாடுதுறை தொழிற்பேட்டையாக மாறவில்லை.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகின்றார். பவுன்ராஜ் 1986- ல் தி.மு.க.,விலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டு வரை செம்பனார்கோவில் ஒன்றிய கிளை செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னர் ஒன்றிய துணைச் செலாளராக பொறுப்பேற்று, ஒன்றிய செலாளராக இருந்தார். தொடர்ச்சியாக இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பவுன்ராஜ் தற்போது தனது மகனுக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக தனது செல்வாக்கை பயன்படுத்தி பெற்றுள்ளார்.
பொறியியல் பட்டதாரியான பி.பாபு, அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராக உள்ளார். அ.தி.மு.க, தே.மு.தி.க கட்சிகளின் வாக்கு வங்கி பலத்தையும், தந்தையின் அரசியல் செல்வாக்கையும் நம்பி வருகிறார்.
இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். தன்னை வெற்றி பெறச் செய்தால் மயிலாடுதுறை- தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியுடன் இலையை துளிர்க்க வைக்க போராடிக் கொண்டிருக்கின்றார்.
மயிலாடுதுறையில் அ.தி.மு.க.,வை எதிர்த்து நேரடியாக தி.மு.க போட்டியிடாத நிலையில் தி.மு.க கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் களம் காண்கிறது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில், மீண்டும் நாடாளுமன்ற தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி நிலவினாலும், காங்கிரஸ் கட்சிக்காக தற்போது சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் 45 வயதான மகள் சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார் என்ற பெரும் பலத்துடனும், குறிப்பாக தி.மு.க.,வினரின் களப்பணியை நம்பி களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் உள்ளிட்டோர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், எம்.பி. திருச்சி சிவா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும், நூறு நாள் வேலைக்கான ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். கூட்டணிக் கட்சியினர் எப்படியும் ‘கை’ தூக்கி விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார் ஆர்.சுதா
அதேபோல பா.ஜ.க கூட்டணியில் மயிலாடுதுறை வேட்பாளராக பா.ம.க மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் என்பவர் களம் காண்கிறார். ஆடுதுறை பேரூராட்சித் தலைவராகவும் உள்ளார். சொந்த செல்வாக்கு, பா.ம.க.,வுக்கு உள்ள வாக்கு வங்கி, கூட்டணிக் கட்சியான பாஜகவின் பலம் இவற்றை நம்பி களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினுக்கு, இதுவரை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன்சம்பத் ஆகியோர் மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் களத்தில் உள்ளார். நாகபட்டினத்தில் ஒரு சமூகப் போராளியாக பணியாற்றி வந்த இவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். அப்போது அவருக்கு நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்து, பின் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் சேர்ந்தவர், கடந்த 2019-ல் வட சென்னை மக்களவைத் தொகுதியிலும், 2021-ல் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்ட அனுபவத்துடன் களத்தில் களமாடிக் கொண்டிருக்கின்றார். மக்கள் மத்தியில் தீவிர பேச்சாளராக, சமூக செயல்பாட்டாளராக அறியப்பட்ட இவர், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சி பலம், மகளிர் பலம், மீனவர்கள் பலம் என களத்தில் குதித்திருந்தாலும் கணிசமான வாக்குகளை இவரும் பிரிக்கின்றார். இருப்பினும் இந்த தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணி- தி.மு.க. கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவின் கை ஓங்கியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.