திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி புதிய வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 33 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அ.தி.மு.க சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில், நெல்லை தொகுதி வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார்.
சிம்லா முத்துச்சோழன் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் சிம்லா முத்துச்சோழன் தோல்வி அடைந்தார். அதன்பிறகு தி.மு.க.,வில் அவருக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த சிம்லா முத்துச்சோழன் சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற சிம்லா முத்துச்சோழனுக்கு அ.தி.மு.க.,வில் வாய்ப்பளிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நெல்லை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளார். நெல்லை தொகுதியில் சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சிராணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான்சிராணி திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“