கோவையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணியை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று, கோவையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக இன்று மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் அருகே வருகிறார். மாலை 5.45 மணிக்கு வாகனப் பேரணி தொடங்கி, பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நிறைவடைகிறது.
சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு இந்த வாகனப் பேரணி நடைபெறுகிறது.
அதன்பின், இரவு, 7:05 மணிக்கு, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். நாளை காலை, 9:30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டு செல்கிறார்.
தொடர்ந்து சேலம் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் நாளை (மார்ச் 19) நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இதற்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கெஜல்நாயக்கன்பட்டிக்கு நாளை மதியம் ஒரு மணியளவில் பிரதமர் வருகிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக காமலாபுரம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு சிறப்புப் பாதுகாப்புப் படையினர் (எஸ்பிஜி), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), மத்திய உளவுப் பிரிவு (ஐபி) மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். முக்கிய இடங்களில் கூடுதல் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். வாகன சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘பிரதமர் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானம் நிலையம் தொடங்கி, ஆர்.எஸ்.புரம் அஞ்சல் நிலையம் வரையிலான பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“