மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வியாழக் கிழமை (மார்ச் 21) வெளியானது. 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது அதன்படி, கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று, பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்;
திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - தங்கர் பச்சான்,
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கும் அவருக்கு கடும்போட்டி நிலவிய நிலையில், 70 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்குமார் தருமபுரியில் வென்றார். எனினும், அதிமுக உடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று நாடாளுமன்றம் சென்றார்.
இம்முறை மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி களமிறங்கலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“