மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், மக்களவைக்கு விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைத்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“