திமுகவின் தவறான ஆட்சியால் தமிழ்நாடு சோர்ந்து போய் இருக்கிறது என பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இணையதளம் வாயிலாக கலந்துரையாடுகிறார்.
இதுகுறித்து அவர் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களின் கடின உழைப்பாளர்களுடன் இன்று ஒரு உரையாடலான ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாட நான் காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள நமது தொண்டர்கள் கட்சியின் நல்லாட்சி கொள்கைகளை மாநிலம் முழுவதும் திறம்பட பரப்புகின்றனர்.
தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய், எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதும் அதே உண்மைதான்’ என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“