நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 543 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 245 பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன.
இதில் தென்காசி மக்களவை தொகுதி குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் தென்காசி 37வது தொகுதி ஆகும். இத்தொகுதி, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தென் மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி இது.
இந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்துக்குள்ளாக இருந்தது.
அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் இணைத்து இந்த தொகுதி உருவாக்கப்பட்டது.
முதல் தேர்தலில் இருந்து 1990கள் வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்தது தென்காசி தொகுதி. 1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991 என ஒன்பது முறை இங்கு காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அருணாச்சலம் ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த தொகுதியில் 90களுக்கு பிறகே தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்து.
1996ஆம் ஆண்டு தென்காசி தொகுதியில் ஜி.கே மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. இக்கட்சி சார்பாகவும் அருணாச்சலமே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுகவும், 2 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன.
கடந்த 2019 ஆம் நடந்த மக்களவை தேர்தலில், தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
திமுக கூட்டணியில் இந்த தொகுதி வழக்கமாக கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது.
தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள்
இராஜபாளையம்
திருவில்லிபுத்தூர் (தனி)
சங்கரன்கோவில்(தனி)
வாசுதேவநல்லூர் (தனி)
கடையநல்லூர்
தென்காசி
சமீபத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, தென்காசி மக்களவையில் மொத்தம் 15,16,183 வாக்காளா்கள் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“