தமிழக தேர்தல் களம் அனல் பறக்கும் வெயிலை கடந்து சூடு பிடித்துள்ளது. நேற்று பங்குனி உத்திரம் தினத்தில் பெரும்பான்மையான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் திருச்சியில் பிரதான கட்சியான தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோ தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது: ம.தி.மு.க வேட்பாளா் துரை வைகோவிடம் கையிருப்பாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், அவரது மனைவி கீதாவிடம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம், மகன் வருணிடம் ரூ.2 ஆயிரத்து 500, மகள் வானதி ரேணுவிடம் ரூ.2 ஆயிரம் உள்ளது. அவரது குடும்பத்தினா் பெயா்களில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 789 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் ((2.07 கிலோ தங்க நகைகள், 6.38 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள்)), ரூ.33 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 498 மதிப்பிலான அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.35 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரத்து 287 உள்ளதாகவும், ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மீது எந்த வழக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க வேட்பாளா் ப.கருப்பையா தனது சொத்து பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துருப்பதாவது: தனது பெயரிலும், மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீா்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோரது பெயா்களில் ரூ.2 கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 542 மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 542 சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம் ரேஞ்ச்ரோவா் உள்பட 3 கார்கள், 5 டிப்பா் லாரிகள் உள்ளதாகவும், 506 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும, ரூ.3.07 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கருப்பையா பெயரில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க வேட்பாளா் ப. செந்தில்நாதன் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது: தனது பெயரிலும், மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் ரூ.88 லட்சத்து 31 ஆயிரத்து 187 அசையும் சொத்துக்கள், ரூ.7.30 கோடி மதிப்பில் அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவா்களிடம் 1.100 கிலோ தங்கம் உள்ளதாகவும், ரூ.64.08 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 2 கார்கள், ஒரு இருச்சக்கர வாகனம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவா் மீது திருச்சி கோட்டை, தில்லைநகா் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“