தமிழகத்தில் நாடாளுமன்றத் பெருவிழா அனல் பறக்கும் வெப்பத்தை கடந்து சூடு பிடிக்கத் துவங்கியிருக்கின்றது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணி முதல் தொடங்கியது. வேட்பு மனுவை தாக்கல் செய்யும் நாளுக்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாக தேர்தல் செலவினங்களுக்காக வேட்பாளர் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அனைத்து தேர்தல் செலவினங்களும் இந்த வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே செய்யப்பட வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் வரை தேர்தலுக்காக செலவு செய்யலாம்.
நாடாளுமன்றத் தொகுதிக்கு பொது வகுப்பினைச் சேர்ந்த வேட்பாளர்கள் காப்புத்தொகையாக ரூ.25 ஆயிரம், பட்டியலின வகுப்பினர் அல்லது பட்டியலின பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர் எனில் காப்பு தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும்.
காப்பு வைப்புத் தொகையை பணமாகவோ அல்லது அரசாங்க கருவூலத்தில் செலுத்து சீட்டு தாக்கல் செய்வதன் மூலமாகவோ தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். காப்புத் தொகையினை காசோலை / வங்கி வரைவோலை, டிஜிட்டல் மூலம் செலுத்த முடியாது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தநிலையில், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் திருச்சி உறையூர் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஓட்டுநர் ராஜேந்திரன் தன்னுடைய விருப்ப மனுவை முதல் ஆளாகத் தாக்கல் செய்தார்.
மேலும், வேட்பாளர்கள் வைப்பு தொகையாக செலுத்த வேண்டிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது கடன் வங்கி அட்டை மூலம் செலுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரிடம் வேட்பு மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் வைப்பு தொகையை ரொக்கமாக செலுத்தும்படி தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த சுயேட்சை வேட்பாளரான ராஜேந்திரன், நாடே டிஜிட்டல் மயமாகி வருகிறது என இந்திய அரசு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாடு முழுவதும் நடக்கும் தேர்தலுக்கான வைப்புத்தொகையை காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ, டிஜிட்டல் மூலமாகவோ செலுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மட்டும் ஏன் டிஜிட்டல் முறையை பயன்படுத்தவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/d155251f-da8.jpg)
தெருவில் தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்து பெரிய கடைகள், அரசு அலுவலகங்கள் வரை சாதாரணமாக டிஜிட்டல் முறையை கையாளும்போது வேட்பாளர் விண்ணப்பத்திற்கு டெபாசிட் தொகையை ஏன் டிஜிட்டலில் பெறக்கூடாது. நான் என்னுடைய வங்கி கடன் அட்டை மூலம் பணம் செலுத்த தயாராக இருக்கிறேன். அதை ஏற்க தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் தயாராக இல்லை.
இதை ஏற்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம். எனவே, தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை வேட்பாளர்கள் இடமிருந்து பெறுவதற்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்தி கியூ ஆர் கோடு மூலம் பணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்ததோடு தனது கழுத்தில் கடன் அட்டை, வங்கி டெபிட் கார்டு, ஆதார் கார்டு, லைசன்ஸ் கார்டுகளை மாலையாக மாட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமாரிடன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கடன் அட்டை மற்றும் அரசாங்கம் மூலம் வழங்கப்பட்ட ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி ஏ.டி.எம் கார்டுகளை மாலையாக போட்டுக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் வலம் வந்த சுயேட்சை வேட்பாளரால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“