மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும், என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக விஜயதரணி இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து இவர் சமீபத்தில், பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, பேரவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, விஜயதரணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் பட்சத்தில், தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
ஒரு தொகுதி காலியானால், 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில்,மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர, முன்னதாக, அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்தார். இருப்பினும் நீதிமன்றம் மேல்முறையீட்டுக்கான அவகாசம் வழங்கியது. இதனால், அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும், எம்எல்ஏக்கள் பட்டியலில் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக தொடர்கிறார்.
இந்நிலையில், இன்று 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும்.
திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“