டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7வது கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. அன்று பிற்பகல் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும்.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பிரதமா் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், எதிர்க் கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் பிரதமா் வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவா்கள் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனா். தோ்தல் முடிவுக்கு பின்பு மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்பட 28 தேசிய, பிராந்திய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இதில் பிகார் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் தோ்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணிக்கு அணி மாறின.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மு.க.ஸ்டாலின் ஜூன் 1 ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிறகு ஜூன் 2 ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.
முன்னதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க பங்கேற்கப் போவதில்லை எனவும், கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“