கோயம்புத்தூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 20-ஆவது தொகுதியாக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உள்ளது. இந்த மக்களவைத் தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரமாக கோவை உள்ளது.
தொழில்துறையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை உள்ளது. தொழில், கல்வி, அரசியல் என அனைத்திலும் முக்கிய இடம்பெறுகிறது. கோவை நாடாளுமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரையில் இடதுசாரிகளின் கோட்டையாகவே உள்ளது. 1952 முதல் இதுவரை நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மட்டுமே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. கூட்டணியில் இருந்தால் பெரும்பாலும், திராவிட கட்சிகள் இந்தத் தொகுதியை இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதே வழக்கம். ஆனால் இந்த முறை கோவை மக்களவைத் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என நேரடியாக மோதுகின்றன. அதோடு ஸ்டார் வேட்பாளர்கள் இருப்பதால் தொகுதி அதீத கவனம் பெற்றுள்ளது.
2024 தேர்தல் வேட்பாளர்கள்
தி.மு.க- கணபதி ராஜ்குமார்
அ.தி.மு.க- சிங்கை ஜி.ராமச்சந்திரன்
பா.ஜ.க- கே.அண்ணாமலை
நாம் தமிழர் கட்சி- கலாமணி ஜெகநாதன்
ஜுன் 4: வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் ஜுன் 4 எண்ணப்பட்டன. கோவையில் 3 கட்சிகளும் முக்கிய வேட்பாளர்களை களமிறக்கியது. திமுகவில் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன், பாஜகவில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். இதனால் பிரச்சார களம் அனல் பறந்தது. திமுக-அதிமுக-பாஜக கட்சிகள் இங்கு நேருக்கு நேர் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். பின் அப்படியே மெல்ல களம் மாறியது. தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வரத் தொடங்கினார்.
காலை 9.59 நிலவரப்படி, கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
திமுக - ராஜ்குமார் 17255
அதிமுக - சிங்கை ராமச்சந்திரன் 6907
பாஜக -அண்ணாமலை 8860
நாம் தமிழர் கட்சி - கலாமணி 241
திமுக முன்னிலை - வித்தியாசம் - 8395
கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை: சுற்று 2 - (சிங்காநல்லூர்)
திமுக (கணபதி ராஜ்குமார்) - 3289
அதிமுக (சிங்கை ராமச்சந்திரன்) - 3008
பாஜக (அண்ணாமலை) - 840
தொடர்ந்து திமுக-அதிமுக- பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 3-வது இடத்திற்கு பின்தங்கினார். திமுக-பாஜக என களம் மாறியது. விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட 1,18,068 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். அதிமுக-வின் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கலாமணி ஜெகநாதன் 82,657 வாக்குகளும் பெற்றனர். கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியான கோவையில் அதிமுக 3-வது இடத்தைப் பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
கோவை மக்களவைத் தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க கூட்டணியில் நின்ற பா.ஜ.க வேட்பாளர் ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் நடராஜன் வெற்றி பெற்றார். சி.பி.எம் நடராஜன் 5,71,150 வாக்குகள் பெற்று வெற்று பெற்றார். சி.பி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளும், ம.நீ.ம மகேந்திரன் 1,45,104 வாக்குகளும், நா.த.க கல்யாண சுந்தரம் 60,519 வாக்குகளும் பெற்றனர்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலில் அ.தி.மு.க நாகராஜன் 431,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.கவின் சிபி ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளும். தி.மு.கவின் கணேஷ்குமார் 2,17,083 வாக்குகளும், சி.பி.எம் பி.ஆர்.நடராஜன் 34,197 வாக்குகளும் பெற்றனர்.
2009 தேர்தல் முடிவுகள்
சி.பி.எம் பி.ஆர்.நடராஜன் 293,165 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸைசின் ஆர்.பிரபு 2,54,501 வாக்குகளும், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஈ.ஆர்.ஈஸ்வரன் 1,28,070 வாக்குகளும், தே.மு.தி.கவின் ஆர்.பாண்டியன் 73,188 வாக்குகளும், பா.ஜ.கவின் செல்வகுமார் 37,909 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
2004 தேர்தல் முடிவுகள்
சிபிஐயைச் சேர்ந்த கே.சுப்பராயன் இந்த தேர்தலில் 504,981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.கவின் சிபி ராதாகிருஷ்ணனுக்கு 3,40,476 வாக்குகள் கிடைத்து தோல்வி அடைந்தார்.
1951-ம் ஆண்டு முதல் முதலில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ராமலிங்க செட்டியார் போட்டியின்றி வெற்றி பெற்றார். தமிழக வரலாற்றில் போட்டியின்றி எம்பியான முதல் வேட்பாளர் என்னும் பெயரைப் பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.