கரூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் கரூர் 23-வது தொகுதியாகும். 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தற்போது கரூர் மக்களவைத் தொகுதியில் வேடச்சந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வேடச்சந்தூர் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தது. மணப்பாறை தொகுதி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தது. விராலிமலை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தது ஆகும்.
கரூர் மக்களவைத் தொகுதி இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. சுதந்திர இந்தியாவின் இரண்டாவது தேர்தல் முதல் மக்களவை தொகுதியாக இருந்து வரும் கரூர் தொகுதியில் காங்கிரஸ் 7 முறையும், அ.தி.மு.க 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2004-க்குப் பிறகு கடந்த தேர்தலில் 2019-ல் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வென்றது.
கரூர் தொகுதியில் மொத்தம் 14,21,494 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,89,900 பேர், பெண் வாக்காளர்கள் 7,31,502 பேர் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 92 பேர் உள்ளனர்
கரூர் மக்களவைத் தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
கடந்த முறை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸின் ஜோதிமணி அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் தம்பிதுரையை சுமார் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இருவருக்கும் வாக்கு வித்தியாசம் 38% ஆகும். ஜோதிமணி 6,95,697 வாக்குகளையும், தம்பிதுரை 2,75,151 வாக்குகளையும் பெற்றனர்.
நாம் தமிழர் கட்சி 38,543 வாக்குகளையும், அ.ம.மு.க 31,139 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 15,967 வாக்குகளையும் பெற்றன.
2014 தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் தம்பிதுரை 5,40,722 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட சின்னசாமி 3,45,475 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.கிருஷ்ணன் 76,560 வாக்குகளும், இப்போது எம்.பியாக உள்ள காங்கிரஸின் ஜோதிமணி 30,459வாக்குகளும் பெற்றனர்.
2009 தேர்தல் முடிவுகள்
38 வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில் அ.தி.மு.கவின் தம்பிதுரை வெற்றி பெற்றார். தம்பிதுரை 3,80,542 வாக்குகள் பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட பழனிசாமி 3,33,288 வாக்குகள் பெற்றார். தே.மு.திகவின் ராமநாதன் 51,196 வாக்குகள் பெற்றார். கொ.மு.க வேட்பாளர் 14,269 வாக்குகள் பெற்றார்.
2024 தேர்தல் வேட்பாளர்கள்
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க- கே.ஆர்.எல்.தங்கவேல்
பா.ஜ.க- செந்தில்நாதன்
நாம் தமிழர் கட்சி- ரெ.கருப்பையா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை அப்டேட்ஸ்; ஜோதிமணி வெற்றி
ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஸ்டார் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இந்த தொகுதி மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி இங்கு மீண்டும் போட்டியிட்டுள்ளார். அ.தி.மு.கவில் தங்கவேல், பா.ஜ.கவில் செந்தில்நாதன் போட்டியிட்டுள்ளனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதி என்பதால் பா.ஜ.கவுக்கு வாக்கு சதவீதம் எப்படி உள்ளது, வெற்றி வாய்ப்பு என்பதை கவனிக்க வேண்டி உள்ளது.
4 மணி நிலவரப்படி, கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 323777 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க வேல் 228646 வாக்குகளும், பாஜக வேட்பாளார் செந்தில்நாதன் 63132 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 55580 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தங்கவேலினை விட 95131 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,33,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 3,67,871 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் 1,01,758 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் 87,451 வாக்குகள் பெற்றுள்ளார். இதையடுத்து ஜோதிமணி 2-வது முறையாக கரூர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்முறை இவர் 1.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.