தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இவர்கள் திமுக ஒரு ஊழல் கட்சி. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை, என்பதையே முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இப்படி தொடர்ந்து தங்களை விமர்சிக்கும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹைடெக் பிரச்சார வியூகத்தை திமுக இப்போது கையில் எடுத்துள்ளது.
அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் "ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில் மோடி படத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜகவின் ஊழல்கள் என ஒரு வாய்ஸ் ஓவர் உடன் கூடிய வீடியோ ஓடத் தொடங்குகிறது.
சுமார் 1 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பாஜக மீது குற்றம் சாட்டப்படும் தேர்தல் பத்திர ஊழல், சுங்கச்சாவடி முறைகேடு, பாரத்மாலா, துவாராகா விரைவு பாலம் கட்டுமானம் என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை குறித்த விவரங்களை அது காட்டுகிறது.
People of TN has come up with G Pay, don’t get confused it is not Google pay 😂😂
— Vijay Thottathil (@vijaythottathil) April 11, 2024
It is Modi G Pay 👌🏼👌🏼
Pay to Modi ji and do the scams & loot!
Spread the word! pic.twitter.com/6ZBzbxqC3a
ஊழலில் ஊறித் திளைக்கும் பாஜக அரசை புறம் தள்ளி இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம் என நிறைவடைகிறது அந்த வீடியோ.
திமுக அரசின் இந்த ஹைடெக் தேர்தல் பிரச்சாரம் இப்போது தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை 40 சதவீத கமிஷன் அரசு என்று விமர்சித்து 'PayCM' 'PayMLA' போஸ்டர்களை கர்நாடகா முழுவதும் ஒட்டி காங்கிரஸ் கவனம் ஈர்த்தது.
முடிவில், கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. தற்போது அதே பாணியில் பிரதமர் மோடியை குறிவைத்து திமுக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.