தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது.
மார்ச் 27-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து மார்ச் 28-ம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 31) வேட்பு மனுக்கள் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 135 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். தொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆவர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண்கள் போட்டியிடுகின்றனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை.
பின்னர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கோரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை பலர் கேட்ட பகுதிகளில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவரும் தற்போதைய எம்.பியுமான கனிமொழி மீண்டும் போட்டியிடும் தொகுதியில் அவர் உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். தென்சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் தமிழச்சி தங்க பாண்டியன்,
தெலங்கானா முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிடும் நிலையில் அங்கு அவர்கள் உள்பட 41 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவையில் 37 பேர் போட்டியிடுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“