நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தாண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் தி.மு.க மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தி.மு.க வார் ரூம் அமைத்து அறிவித்துள்ளது.
அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை தி.மு.க. இணை அமைப்பு செயலாளராக உள்ள அன்பகம் கலை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளராக உள்ள என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை புகார்கள், பாதுகாப்பு விஷயங்களுக்கு மண்டல அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“