தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று (ஜுன் 4) எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தி.மு.க கூட்டணியில் சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க உள்பட 8 கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. பா.ஜ.க கூட்டணியில் பாகம, அமமுக, ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக கட்சிகள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் 38 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை பெற்று வருகிறார். பா.ஜ.க கூட்டணியில் தருமபுரியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 70,000 வாக்குகள் பெற்று தி.மு.க வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி இந்தியா கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் சென்னை தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“