நாடாளுமன்ற மக்களைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.திக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்து வருகிறது. பா.ஜ.க- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ளனர். அ.தி.மு.க பா.ம.க, தே.மு.தி.க உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
தி.மு.க கூட்டணியில் ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க-க்கு தலா ஒரு தொகுதி, சி.பி.எம், சி.பி.ஐ -க்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் பிற கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் உடன்பாடு எட்டப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் தி.மு.க உடன் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
தற்கான நியாயமான காரணங்களையும் எடுத்துவைத்துள்ளோம். நாங்கள் கேட்டுள்ள தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட த.வா.க தயாராக உள்ளது என்று கூறினார்.
அதே போல், மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க உடன் இன்று (மார்ச் 2) முதல்கட்டதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதையடுத்து அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க கேட்டுள்ளோம். தேர்தலில் தி.மு.கவிற்கு ம.ம.க ஆதரவு அளிக்கிறது. எந்த தொகுதி கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“