இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதி களநிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள் அ.தி.மு.க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மக்களவைத் தொகுதி நிலவரம் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சேலம் 15-வது தொகுதி ஆகும். ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்த தொகுதி 17 மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இங்கு விவசாயம், ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் பிரதானமாக செய்யப்படுகிறது. கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், முதலியார் சமூக மக்கள் அதிகம் உள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் ஒரு பகுதியான சேலத்தில் அ.தி.மு.கவுக்கு செல்வாக்கு உள்ளது என்றாலும் கடந்த 2019 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன் அ.தி.மு.க வேட்பாளரான சரவணனை வீழ்த்தி 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த முறை தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பாக 7 பேர், சுயேட்சையாக 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2-வது இடம் பிடித்த சரவணன் 4,59,376 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தார்.
தற்போது எம்.பியாக உள்ள பார்த்திபன் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். சாலை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும், பட்டா, சிட்டா தொடர்பான பிரச்னைகளையும் தீர்த்து வைத்துள்ளர். ஜருகமலை கிராம மக்களின் நிண்ட கால கோரிக்கையாக இருந்த செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். எனினும் உட்கட்சி பூசல் காரணமாக சில பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க இடையே போட்டி என்றாலும் கடந்த காலங்களைப் பார்க்கையில் இங்கு காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1952 முதல் நடைபெறும் தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.கவின் மூத்த தலைவர் செம்மலை 2009-ல் இந்த தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த தொகுதியில் நீண்ட வெற்றி வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க மீண்டும் இங்கு வாய்ப்பு அளிக்குமா அல்லது தி.மு.கவே போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரம் அ.தி.மு.க இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற கடுமையான போட்டியை கொடுக்கும். பா.ஜ.க, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் என்ன திட்டம் வகுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“