இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் களம் காணுகின்றனர். வி.சி.க பானை சின்னத்தில் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் வி.சி.க தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. அதன்படி இன்று தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கட்சி மொத்தம் 6 மாநிலங்களில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 4 மாநில வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தெலங்கானவில் மட்டும் 10 இடங்களில் போட்டியிடுகிறது. கர்நாடகா 6, கேரளா 5, மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் மட்டும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உடன் போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் வி.சி.க தனித்து போட்டியிடுகிறது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“