தமிழ்நாடு சட்டமன்றம் நிகழ்வுகளையொட்டி இன்று செய்யப்பட்ட அறிவிப்புகள் இங்கே தொகுத்து தரப்படுகிறது. லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்ற உறுதி தரப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள்:
நீட் தேர்வுக்காக 413 மையங்கள் அமைத்து பயிற்சி அளித்ததில் தமிழக அரசுக்கு ரூ 4.5 கோடி செலவு ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டடங்களின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். நீட் தேர்வுக்கான பயிற்சியை தனியார் பள்ளிகள் அலுவல் நேரத்தில் வழங்கக்கூடாது, விடுமுறை நாட்கள் அல்லது பள்ளி அலுவல் முடிந்த பிறகு வழங்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சிபிஎஸ்இ பள்ளிகள் இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அங்கீகாரத்தை தமிழக அரசிடம் புதுப்பிக்க வேண்டும் என்கிற முக்கிய அறிவிப்பையும் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிகமானோருக்கு வேலை வழங்கியதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார். ‘சேர்க்கையில்லாத, தரம் குறைந்த கல்லூரிகள் மூடப்படும்’ என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழக டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளது. டிஜிபி நியமனத்தை ரத்து செய்து, புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய சட்ட விதிகள்படியே டிஜிபி பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருங்காலங்களில் பின்பற்றப்படும்’ என்றார் அவர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும், துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
லோக் ஆயுக்தா மசோதா சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்கிற முக்கிய அறிக்கையை சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.