Ramanathapuram Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிபெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி 4,22,156 வாக்குகள் பெற்றுள்ளார். பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 2,82,965 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் 84,324 வாக்குகள் பெற்றுள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் 82,813 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதனிடையே, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சுயேச்சையாக போட்டியிட்ட ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 2,534 வாக்குகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 493 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 1,603 வாக்குகளும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 1,154 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவரை இவர்கள் நால்வரும் பெற்ற மொத்த வாக்குகள் 5,784 என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடனை, ராமநாதபுரம், அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்), திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 7,97, 012 ஆண் வாக்காளர்கள், 8,08,955 பெண் வாக்காளர்கள், 79 மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் என மொத்தம் 16,06,046 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 2024 மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இவர்கள்தான்:-
தி.மு.க கூட்டணி தரப்பில் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - ஐ.யூ.எம்.எல்), அ.தி.மு.க ஜெயபெருமாள், பா.ஜ.க ஆதரவில் ஓ.பன்னீர்செல்வம் (சுயேச்சை) மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சந்திரபிரபா.
ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 68.18 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி இங்கு இந்தியா கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வெளியாகின.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் கடந்த கால தேர்தல் வரலாறு:-
'தண்ணீர் இல்லாத காடு', 'வானம் பார்த்த பூமி' என்பது போன்ற அடைமொழிகளுக்கு பெயர் போன மாவட்டம் ராமநாதபுரம். வங்க கடல் அலைமோத, வறண்ட காற்று ஆரத் தழுவும் தொகுதியான ராமநாதபுரத்தில் இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில், இஸ்லாமியர்கள் அதிகம் செல்லும் ஏர்வாடி தர்கா, கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்லும் ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலம், வேர்௧ாடு புனித சந்தியாகப்பர் ஆலயம் என ஏராளமான புனித தலங்களையும், சுற்றுலாத் தலங்களையும் கொண்டது.
மீன்பிடித்தல், விவசாயம், நெசவுத் தொழில் போன்றவை இந்தத் தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. புவிசார் குறியீடு பெற்ற 'குண்டு மிளகாய்', பருத்தி போன்றவை விவசாயிகளின் பணப் பயிராக இருக்கிறது. ராமேஸ்வரம், தொண்டி போன்ற சிறு துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
ராமநாதபுரம் தொகுதியில் நடைபெற்ற 1951, 1957, 1962 மக்களவை தேர்தல்களில் காங்கிரசின் வி.வி ஆர். என். ஆர். நாகப்ப செட்டியார், பி.சுப்பையா அம்பலம், என்.அருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்றனர். 1967ல் சுயேச்சை வேட்பாளரான எஸ்.எம். முஹம்மது ஷெரிப் வென்றார். இதன்பிறகு நடந்த 1971 தேர்தலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர் பி.கே. மூக்கையா தேவர் வென்றார்.
1977ல் அ.தி.மு.க-வின் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) ப.அன்பழகனும், 1980ல் தி.மு.க-வின் (திராவிட முன்னேற்றக் கழகம்) எம்.எஸ்.கே.சத்தியேந்திரனும் வெற்றி பெற்றனர். இதன்பின்னர் நடந்த 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வி. ராஜேஸ்வரன் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றார்.
1996ல் தமிழ் மாநில காங்கிரசின் எஸ்.பி.உடையப்பனும், 1998ல் அ.தி.மு.க-வின் வி.சத்தியமூர்த்தியும், 1999ல் அ.தி.மு.க-வின் கே.மலைசாமியும் வென்றனர். இதனைத் தொடர்ந்து, 2004ல் தி.மு.க சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன் அ.தி.மு.க-வின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன்பிறகு நடந்த 2009 தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரும், நடிகருமான ஜே.கே. ரித்தேஷ் வென்றார்.
2014ல் நாடெங்கும் மோடி அலை வீசிய போது, தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மோடியா? லேடியா? என்று சவால்விட்டார் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரது தீவிர பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளில் 37ல் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. அதன் ஒருபகுதியாக, ராமநாதபுரத்தில் அ.தி.மு.க-வின் அன்வர் ராஜா வென்றார்.
இதன்பின்னர் நடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட கே. நவாஸ் கனி 4,69,943 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமாடிய பா.ஜ.க-வின் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகளும், டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரான வி.டி.என் ஆனந்த் 1,41,806 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் புவனேஸ்வரி 46,386 வாக்குகளும் பெற்றனர். இந்த வேட்பாளர்களில் வி.டி.என் ஆனந்த் மட்டும் தற்போது தி.மு.க-வில் இணைந்துவிட்டார்.
2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றது. திருவாடனை, அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) தொகுதியில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வென்றது.
இப்படியாக தி.மு.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் கோலோச்சும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கே. நவாஸ் கனி, அ.தி.மு.க-வின் ஜெயபெருமாள், பா.ஜ.க ஆதரவில் ஓ.பன்னீர்செல்வம் (சுயேச்சை) மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சந்திரபிரபா ஆகியோர் களமாடி உள்ளார்கள். இந்த வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.