தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இன்று (மார்ச் 10) வேட்பாளர் நேர்காணலை துவங்க உள்ளன
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, ஐயூஎம்எல், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளது.
அதன்படி திமுக 21 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலா இரு இடங்களிலும், கொமதேக, ஐயூஎம்எல், மதிமுக தலா 1 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கு இன்று திமுக வேட்பாளர் நேர்காணல் நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நேர்காணலை நடத்துவார்.
நேர்காணலின்போது அந்தந்த மக்களவை தொகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் விருப்பமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக் கூடாது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுகவை பொருத்தவரை தற்போதைய எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோரும், கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, சபாநாயகர் அப்பாவின் மகன் அலெக்ஸ் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கு, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றும், நாளையும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நேர்காணலை நடத்துகிறார். இன்று 20 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை 20 மக்களவை தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இதேபோல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளிடம் இருந்து இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, இன்றே நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இருக்கும் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கழ ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“