இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மத்தியிலும், மாநிலக் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க, எதிர்கட்சியான அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பணிகளைத் தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தி.மு.க, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமனம் செய்து தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பா.ஜ.க பொறுப்பாளர்களை நியமித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளை முந்தி பா.ஜ.க பொறுப்பாளர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு என்.எல். நாகராஜன், தென் சென்னைக்கு பாஸ்கர், மத்திய சென்னைக்கு ஜி.ராதாகிருஷ்ணன், சேலத்துக்கு கே.பி. ராமலிங்கம், சிதம்பரத்துக்கு எஸ்.ஜி.சூர்யா, தூத்துக்குடிக்கு மகாராஜன், தென்காசிக்கு பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு தொகுதிக்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்பட 39 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“