இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு விநியோகம் என தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த கட்டுரை தொடரில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி நிலவரம் குறித்து பார்ப்போம். இங்கு ஈரோடு மக்களவைத் தொகுதி குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு 17-வது மக்களவைத் தொகுதியாகும். மஞ்சள் மாநகரம், திராவிட இயக்கத் தலைவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் என்ற அடையாளங்களை கொண்டுள்ளது. ஈரோட்டில் ஜவுளி, விவசாயம், சமையம் எண்ணெய், அரிசி உற்பத்தி சார்ந்த தொழில்கள் அதிகம் செய்யப்படுகின்றன. இது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக விவசாயத்தில் மஞ்சள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. பல்வேறு ரக மஞ்சள் விவசாயம் செய்யப்படுகிறது. அதனால் மஞ்சள் மாநகரம் என பெயர் பெற்றுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவான தொகுதிகளில் ஈரோடும் ஒன்று. இதுவரை 3 தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. 2008-ல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிந்து தனி மக்களைவை தொகுதியாக ஈரோடு பிரிக்கப்பட்டது. ஈரோடு மக்களவை 3 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகியவை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்ததாகும், குமாரபாளையம் நாமக்கல் மாவட்டத்தையும், காங்கேயம், தாராபுரம் திருப்பூர் மாவட்டதை சேர்ந்ததாகவும் உள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க.கவின் கணேசமூர்த்தி வெற்றி பெற்று எம்.பியாக உள்ளார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரான மணிமாறனை விட 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 5,63,591 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
அ.தி.மு.க வேட்பாளர் மணிமாறன் 3,52,973 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3-வது இடத்தைப் பிடித்தது. ம.நீ.க சார்பில் போட்டியிட்ட சரவணக்குமார் 47,719 வாக்குகள் 4.47% வாக்குகள் பெற்றார்.
எம்.பியாக உள்ள கணேசமூர்த்தி இந்த தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் முறையாக இங்கு தேர்தல் நடைபெற்ற போது வெற்றி பெற்றார். பிறகு 2019 தேர்தலில் இதே தொகுதியில் நின்று வென்றார். 3 முறை மட்டுமே தேர்தல் நடைபெற்ற இந்த தொகுதியில் 2 முறை ம.தி.மு.க கணேசமூர்த்தியும், ஒரு முறை அ.தி.மு.கவும் வென்றுள்ளது. அதனால் இந்த தேர்தலில் வேட்பாளர்களிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவிற்கு இதே தொகுதி வழங்கப்பட்டால் 3-வது முறை வெற்றி பெற கடும் போட்டியாக இருப்பார்கள். அதே நேரம் அ.தி.மு.கவும் தி.மு.க விடம் இருந்து தொகுதியை பிடிக்க போட்டி போடுவார்கள். இடையில் பா.ஜ.க, நா.த.க, அ.ம.மு.க கட்சிகள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை களமிறக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த முறை 2014 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செல்வக்குமார் சின்னையனிடம் கணேசமூர்த்தி தோல்வியை தழுவினார். 4,66,995 வாக்குகள் பெற்ற சின்னையன் வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்றார். இந்த தேர்தலில் தி.மு.க 3-வது இடம் பிடித்தது. முன்னதாக 2009 முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில் கணேசமூர்த்தி- காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடையே கடும் போட்டி நிலவியது. கணேசமூர்த்தி இளங்கோவனை விட 49,336 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார். 2009 பொதுத் தேர்தலில், ம.தி.மு.க சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே ஆவார்.
கடந்த காலங்களை பார்க்கும் போது ஈரோடு மக்களவைத் தொகுதியில் ம.தி.மு.க செல்வாக்கு பெற்ற கட்சியாக உள்ளது. இந்த முறையும் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க போட்டியிட உள்ளது. ஆனால் இம்முறை உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் ம.தி.மு.கவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவதாக அறித்துள்ளனர். எனவே இது வாக்குகளை பாதிக்குமா அல்லது வெற்றியை தருமா? என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயம் மீண்டும் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க கடுமையான சவால்களை கொடுக்கும். பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் வியூகங்களை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.