தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமை கூட்டணியில் பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இன்று (மார்ச் 19) காலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.க நிறுவனர்
ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தி.மு.க காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடுகளை நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கவில்லை. பா.ஜ.க ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க தலைவர்கள் பா.ம.க உடன் 3,4 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். அன்புமணி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மக்களவைத் தேர்தலில் பா.ம.க பா.ஜ.க உடன் சேர்ந்து போட்டியிடும் என அக்கட்சி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை திண்டிவனத்தில் உள்ள ராமதாஸின் தைலாபுரம் தோட்ட வீட்டிற்கு பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இருகட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பா.ம.காவிற்கான தொகுதி பங்கீடு குறித்து அறிக்கையை அண்ணாமலை வழங்கினார். இதன்பின்னர் இரு கட்சிகளும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.காவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு பா.ம.க நிறுவனர்
ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“