சிலை வைத்து ஊர்வலமாக எடுத்து செல்ல விநாயகர் கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 22 இடங்களில், திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 16 இடங்களிலும் புதிதாக விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கும். ஊர்வலம் செல்வதற்கும் அனுமதி வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு அனுமதி வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து அமைப்புகளும் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதிக்குரிய மனுக்கள் மீது பரிசீலனை செய்து உள்ளூர் போலீசார் அனுமதி வழங்குகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த ஆண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது எனவும் ஈரோட்டை சேர்ந்தவர் கோவையில் சிலை வைக்க அனுமதி கூறியுள்ளார் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கோரிய மனுக்கள் தாக்கல் செய்தால் மனுக்கள் ஏற்கப்படாது என கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார். மேலும் சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறாத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? விநாயகர் சிலைகளை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என காட்டமாக தெரிவித்த நீதிபதி இது அனைத்தும் சொந்த கருத்து எனவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“