திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் தங்களது
சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் விமான சேவை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ஓசூரில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டைக்கு தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. விமான நிலையம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற லாரி திடீரென இடதுபுறம் திரும்பியதால், தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு சென்ற லாரி வலதுபுறம் திரும்பியதால் நிலை தடுமாறி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுச்சுவரை உடைத்து லாரி மோதி நின்றது.
உடனடியாக விமான நிலைய அதிரடிப்படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய காவல்துறையினர், போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் எனப் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுற்றுச்சுவரில் சிக்கிய லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

விபத்தை தவிர்க்க அவசரமாக திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேண்டுமென்றே விமான நிலைய சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதிய சமயத்தில் ஓடுபாதையில் விமானங்கள் ஏதும் டேக் ஆப் ஆகவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். விமான நிலைய ஓடுபாதைக்கு அருகே விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: க.சண்முகவடிவல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“