Advertisment

லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: பாஜக பிரமுகர்கள் கைது

தஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
lorry

லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் போலீஸ் எஸ்.ஐ டேவிட் தலைமையிலான தனிப்படையினர் பேராவூரணி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

அப்போது இன்று காலை பேராவூரணியிலிருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர் லாரியை வழிமறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லாரியில் ஒரு ரகசிய அறை அமைத்து அதில் சுமார் 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த லாரியை பின் தொடர்ந்து பாஜக கொடியுடன் சொகுசு காரில் வந்தவர்களையும் காவல்துறையினர் பிடித்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத், ஒரத்தநாடு போலீஸ் ஏ.எஸ்.பிசஹனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் ஊத்துமலை பெரமராஜ் (34) என்பவரையும், கஞ்சா கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த பேராவூரணி அருகே உள்ள காரங்குடா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (44), கஞ்சாவை பதுக்கி வைக்க உதவியதாக அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய 3 பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தஞ்சாவூர் விளார்ரோடு பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கருப்பையா (52) என்பவர் இவர்களை இயக்கியதும் தெரியவந்தது. லாரியின் நம்பர் பிளேட்டை மாற்றியதும், கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த 3 ஃபைபர் படகுகளையும் சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதியிலிருந்து போலீசார் கைபற்றியுள்ளனர். கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகப்பள்ளி பகுதியில் இருந்து பெரமராஜ் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்ததும், முடச்சிக்காடு அருகே பாலம் ஒன்றில் லாரியை நிறுத்தி அண்ணாதுரை காரில் கஞ்சா மூட்டைகளை ஏற்றியதும், அதனை முத்தையா என்பவர் வேலை பார்த்துவரும் தென்னந்தோப்பில் பதுக்கி வைத்து, இலங்கையில் இருந்து தகவல் கிடைத்ததும், அண்ணாதுரைக்கு சொந்தமான படகில் கடத்துவதற்கு முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.

உடனே இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரமராஜ், அண்ணாதுரை, முத்தையா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி தஞ்சையை சேர்ந்த கருப்பையாவை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அண்ணாதுரை மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளி கருப்பையா ஆகிய இருவரும் பாஜக பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smuggling Arrest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment