Banned Lottery And Lottery Results In Tamil Nadu: தமிழ்நாட்டில் சட்ட விரோத லாட்டரிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தாவிட்டால், ஜெயலலிதா முன்பு எடுத்த தைரியமான நடவடிக்கை அர்த்தமற்று போய்விடும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நிகழ்ந்த பெரிய புரட்சிகரமான நிகழ்வு, லாட்டரி ஒழிப்புதான். அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாத குடும்பங்களின் குடும்பத் தலைவர்களும் லாட்டரி போதையில் சிக்கி, பணத்தை இழந்த கொடுமை அரங்கேறிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் லாட்டரிக்கு இருந்த மார்க்கெட்டை புரிந்துகொண்டு அஸ்ஸாம், மணிப்பூர் என பல வடகிழக்கு மாநிலங்கள் தமிழில் லாட்டரி சீட்டு அச்சடித்து, இங்கு விற்றன.
தமிழ்நாட்டில் லாட்டரி தொழில் அதிபர்கள் ஆகப்பெரிய அதிபர்களாக உருப்பெற்றார்கள். இன்றைக்கு டாஸ்மாக் போல, அன்று லாட்டரி அரசுக்கு பணம் கொழிக்கும் இலாகாவாக இருந்தது. எனினும் 2002-ல் இதை தைரியமான முடிவு எடுத்து ஒழித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு லாட்டரி விற்பனை சட்ட விரோதம் ஆனது. அந்த காலகட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள், லாட்டரி மோகத்தில் சிக்காமல் தப்பினர்.
ஆனால் இணையத்தின் தாக்கம் தற்போது தமிழகத்திற்குள் மீண்டும் சட்ட விரோதமாக லாட்டரிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தவிர, சட்ட விரோதமாக அச்சடித்தும் பல இடங்களில் லாட்டரிகளை விற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பூட்டான் லாட்டரி, ஸ்கை லாட்டரி, லக்கி வின் லாட்டரி, ஜாக்பாட் லாட்டரி, சன் லாட்டரி, ஸ்கை லயன் லாட்டரி என பல பெயர்களில் சட்ட விரோத லாட்டரி கடை விரிக்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் உள்ளூர் அதிகாரிகளை உரிய விதத்தில் சமாளித்து இது போன்ற லாட்டரிகளை நடத்துகிறார்கள். சில இடங்களில் நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து லாட்டரி புழக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அண்மையில் விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், தென்னமாதேவி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நெம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சந்திரன் (51), செம்மேடு அழகேசன் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் 100 லாட்டரி சீட்டுகள் மற்றும் 2000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர். ஊத்தங்கரை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ஹெரிப் (வயது31), ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (26), கல்லாவியை அடுத்துள்ள என்.வெள்ளாளபட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) ஆகியோரே அந்த மூவர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைதான 3 பேரும் ஊத்தங்கரை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் போலி லாட்டரிகள், இணையதள லாட்டரிகள், சட்டவிரோத லாட்டரிகள் ஆகியவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும். இதன் மூலமாகவே இளைஞர்கள் இந்த லாட்டரிச் சுழலில் சிக்காமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.