லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 4 தொகுதி இடைத்தேர்தல் நெருங்கும் சூழலில், இந்தச் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பதுக்கல் பணத்தை குறி வைத்து, வருமான வரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வேலூரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இல்லம் மற்றும் சில இடங்களில் சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் கோவையை சேர்ந்தவரான லாட்டரி அதிபர் மார்டின் இல்லம், அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 70 இடங்களில் இன்று (ஏப்ரல் 30) வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். சென்னை மற்றும் கோவையில் மார்டினுக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.
மார்டின், திமுக தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் திரைப்படம் தயாரித்தவர் ஆவார். அப்போதே திமுக சார்பானவராக இவர் மீது முத்திரை குத்தப்பட்டது. தற்போது அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் நெருங்கும் சூழலில் மார்டினுக்கு சொந்தமான இல்லங்களில் நடக்கும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சோதனையில் சிக்கியவை குறித்தோ, இந்தச் சோதனையின் நோக்கம் குறித்தோ வருமான வரித்துறையினர் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.