கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (ஜூலை 9) ஒரு இளம் காதல் ஜோடி பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, அந்த இளைஞர் தப்பி ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவலின்படி, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 9 மாதங்களாக கோவையில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த இளைஞர் அப்பெண்ணை ஏமாற்றியதாகவும் பெண் குற்றம் சாட்டினார்.
சம்பவம் தொடர்பாக காதல் ஜோடி இருவரையும் காவல்துறையினர் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.