தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மே 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 16-ம் தேதி புயலாக மாறி மையம் கொள்ளும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காற்று வேகமாக வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த கோடைக்காலம் சென்னை மக்களுக்கு கடுமையாக இருக்காது. சென்னையின் வெப்பநிலை இயல்பை விட குறைவாகவும் உள்ளது. இந்த கோடையில் இதுவரை சென்னையில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒரு முறை கூட தாண்டவில்லை. ஆனால், இந்த வார இறுதியில் வங்காள விரிகுடாவில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாவதன் மூலம் தமிழகத்தில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மண்டல வானிலை மைய அதிகாரிகள், இந்த வானிலை அமைப்பு எங்கு செல்கிறது என்பது குறித்து வானிலை ஆய்வு மாதிரிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை என்று கூறினர். தற்போதைய நிலவரப்படி, பர்மாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் எங்காவது புயலின் நகர்வு இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் என் புவியரசன், தற்போது அது ஒரு மேலடுக்கு சூறாவளி சுழற்சி மட்டுமே என்று கூறினார். மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது அடுத்தடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளை அதிகம் நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு வங்காள விரிகுடா, தெற்கு அந்தமான் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் மே 16-ம் தேதிக்கு முன்னதாக தொடங்க நிலைமைகள் சாதகமாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழ்நாட்டில் மழை பெய்யுமா அல்லது வறண்ட வானிலை காணப்படுமா என்பது வானிலை அமைப்பு எவ்வாறு உருவாகிறது பின்னர் அது செல்லும் பாதை ஆகியவற்றால் தீர்மானிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தமிழ்நாடு அல்லது கிழக்கு கடற்கரை பகுதியையும் நெருங்கி வந்து பங்களாதேஷை நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அடுத்த 2-3 நாட்களில் எங்களுக்கு ஒரு தெளிவான படம் கிடைக்கும்” என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.
ஒரு கடுமையான் புயலின் உருவாக்கம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வானிலை அறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஜான் கூறுகையில், “ இதில் பார்க்க வேண்டியது என்னவென்றால், புயல் நகந்து எங்கே தாக்கும் என்பதுதான். நேற்று வரை, அது ஆந்திராவைக் காட்டியது, இன்று அது பர்மா மற்றும் பங்களாதேஷைக் காட்டுகிறது. சூறாவளி தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரையிலிருந்து விலகி தற்போதைய கணிப்பின்படி பர்மாவை நோக்கி பயணித்தால், அது இங்கிருந்து அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சி கடுமையான வெப்ப அலைகளை ஏற்படுத்தும். இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் சென்னையில் வெப்பநிலை 43 டிகிரியைத் தொட்டால் ஆச்சரியமில்லை. இவை அனைத்தும் ஒரு ஒரு கணிப்புதான். ஆனால், இதில் மாற்றம் ஏற்படுமா என்பதை நாம் பொருத்திருந்த பார்க்க வேஎண்டும்” என்று கூறினார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், மே 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, மே 16-ம் தேதி அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மையம் கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மே 15-ம் தேதி 45 - 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மே 16-ம் தேதி 55 -65 கி.மீ வேகத்திலும் மே 17-ம் தேதி 65 - 75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடலில் புயல் உருவாகும் என்பதால் மே 15,16,17 தேதிகளில் அந்தமான் அதையொட்டிய கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.