தமிழ்நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் வாட்டி வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரி என சதம் அடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் சற்று குறைந்து குளிர்சியான சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று மே-3 (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர் உள்பட உள்மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை (வியாழக்கிழமை) முதல் 6-ம் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பின்னர், 6-ம் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, வருகிற 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அல்லது 8-ம் தேதி (திங்கட்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். இது அடுத்து தீவிர தாழ்வு பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுமா? என்பது குறித்த அடுத்தகட்ட நகர்வு பற்றி ஓரிரு நாளில் தெரிய வரும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் மேற்கு வங்க கடல், அதனையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல், தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“