வங்கக்கடலில் கடந்த மாதம் நவ. 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த 'ஃபீஞ்சல்' புயல் நேற்று முன்தினம் கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரிக்கு அருகே நேற்று முன்தினம் இரவில் இருந்து 'ஃபீஞ்சல்' புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் 'ஃபீஞ்சல்' புயல் கரையேறியும் வலு குறையாமல் புதுச்சேரியில் நகராமல் நின்றது.
அதனால் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அந்த பகுதிகளில் எல்லாம் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பதிவானதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், நேற்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின்னர் தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவிழக்கும் என்றும் நாளை வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரையில் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போச்சம்பள்ளியில் 25 செ.மீ. மழையும், திருவண்ணாமலையில் 22.2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“